Tuesday, August 21, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்- தொடர்ச்சி


7 ) மணமகன் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : - 
                           மணமகனுக்கும் ,பெற்றோர் ஒவ்வொருவருக்கும் இரண்டு மாலைகள் அணிவித்து ,புனித நீர் , பால் , திருநீறு அளித்தல் . மணமகனின் தாய்க்கு பூ கொடுக்கவேண்டும் .  
  அ ) குரு வழிபாடு : - ( உள்ளத்துள் குருவை நினைத்து ) 
          தெளிவு குருவின் திருமேனி காண்டல்
          தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
          தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
          தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே .                 ( திருமந்திரம் ) 
 ஆ ) மணமகனுக்கு ஜந்தெழுத்தோதுதல் : - 
       பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
      ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்
      கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது
      நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே .              ( அப்பர் ) 
இ ) பிள்ளையார் 
     ஜந்து கரத்தனை ஆனை முகத்தனை
     இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
     நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
     புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேன் .        ( திருமூலர் ) 
 ஈ ) திருவிளக்கு  
      சோதியே சுடரே சூள்ஒளி விளக்கே
      சுரிகுழல் பனைமுலை மடந்தை
      பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
     பங்கயத்து அயனும் மால் அறியா
     நீதியே ! செல்வத் திருப்பெருந்திறையில்
     நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
     ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால்
     அதெந்துவே என்றருளாயே .                          ( வாதவூரர் ) 
உ )  தான்ய லட்சுமி - நிறை நாழி : - 
     அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
     பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
     என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
     இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே  .             ( அப்பர் ) 
ஊ ) அம்மையப்பர் வழிபாடு : -      
     நன்றுடையானைத் தீயதி லானை நரை வெள்ளேறு
     ஒன்றூடையானை உமையொருபாகம் உடையானைச்
     சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
     குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே .   ( சம்பந்தர் )

     சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
     சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
    பொங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
    அங்கமலத் தயனோடு மாலும் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
    செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட்டானே போற்றி போற்றி  .                ( அப்பர் )

  பொங்குருவச் செல்வம் கல்வி பொருவில்லா வாய்மை தூய்மை
  இங்கெமக்கு அருளவல்ல இணையில்லா எம்பிராட்டி
  பங்கயத்தஞ்சூழ் கூடற்பவளமால் வரையை நீங்கா
  அங்கயற்கண்ணி மங்கை அடிக்கமலங்கள் போற்றி .

அரசாணிக்கால் நாட்டல் : - கன்னி மூலையில் - 

 யோகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
 பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
 ஆகமார்த்த தோலுடையவன் கோவண ஆடையின்மேல்
 நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே !                    ( சம்பந்தர் )

தாய்மாமனுடன் சடங்கு : -

அ . அம்மையப்பர் வழிபாடு : -

முன்னியா நின்ற முதல்வா போற்றி
            மூவாத மேனியுடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
           ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
          மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியர் கங்கைத் தலைவா போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி .     ( அப்பர் )

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின்  நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே .                 ( அப்பர் )

காப்பணிதல் : - ( வலக்கையில் ) தாய்மாமன் மணமகனின் வலது கையில்
காப்பு கட்டவேண்டும் . மஞ்சள் நூலில் விரலி மஞ்சள் ,வெற்றிலை வைத்து கட்டியுள்ளதே காப்பு ஆகும் .

மாறிலா நிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறுநாளின் முன்னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத் தொண்டரும் நிகரிலாதவருக்கு
ஆறு சூடினார் அருட் திருக்காப்பு நாண் அணிவார் .     ( சேக்கிழார் )

முளைப்பாலிகை தெளித்தல் : - 
                        பின்பு ஒரு சிறிய குழந்தையின் கையில் ஊற வைத்த நவதானியங்களை கொடுத்து , தாய்மாமன் கையில் கொடுத்து , மணமகன் கையில் கொடுத்து முளைப்பாலிகையில் வைக்கச் சொல்லுவார்கள் .இதே முறையில் அங்கு உள்ள 7 அல்லது 9 முளைப்பாலிகைகளில் ஊறவைத்த நவதானியம் நிரப்ப வேண்டும் .

பாரவன்காண் பாரதனிற் பயிரானவன்காண்
பயிர் விளைக்கும் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன்காண் பிறையெ யிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன்காண் சீருடைத் தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே .     ( அப்பர் )

முளைப்பாலிகை தெளித்தவுடன் மணமகனுக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் . அப்புதிய ஆடைகளை அணிந்தே மணமகன் திருமாங்கல்ய தாரணத்திற்கு வரவேண்டும் .

ஈ ) புத்தாடையளித்தல் : - 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
     போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னையென் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறியொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி
    ஆருரானை மறக்கலுமாமே .                           ( சுந்தரர் )

மணமகள் மேடைக்கு வருகை : -

பெற்றோர் வழிபாடு : - மணமகன் போன்று மணமகளும் அவரது தாய் தந்தையருக்கு பாதபூசை செய்யவேண்டும் .

திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி
புகழ்வார் புகழ்ந்தகைய வல்ல அடி
உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி
உருவென்று உணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடிலநாடன் அடி
திருவீரட்டானத்தெம் செல்வன் அடி .                         ( அப்பர் )  

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமணச் சடங்கு நூல்

                   நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்களில் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன , ஆனால் அந்த மந்திரங்களின் பொருள் நமக்கு தெரிவதில்லை .காரணம் அந்த மந்திரங்கள் வடமொழியில் இருப்பதால் . திருமணச் சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு இணையான பொருள் உள்ள தமிழ் பாடல்கள் நமது பன்னிரு திருமுறைகளில் உள்ளன .
          திருமணச் சடங்குகளில் அதற்குப் பொருத்தமான பாடல்களைச் சொல்லி நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து உணர்ந்து பரவியதால் இப்பொழுது திருமணங்களில் இந்த முறை செயல்பட ஆரம்பித்து உள்ளது . இந்த நடைமுறையை சைவ அன்பர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் வடமொழி தெரியாதவர்களும் நடைமுறைப்படுத்தினால் , அனைவருக்கும் பாடல்களைச் செவிமடுத்து அதன் பொருள் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக இந்த தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண  நூல் வெளியிடப்படுகின்றது .

திருமணச் சடங்கு வரிசை முறையும் , அந்தந்தச் சடங்குகளின் ஓதும் திருமுறைப் பாடல்களும்  : -

             மண விழாவிற்குக் குறித்த நேரத்திற்கு ஒரு மணி முன்னதாகவே குருக்கள் மேடையில் வேண்டியவற்றை முறைப்படுத்தி வைக்க வேண்டும் .

1} மஞ்சள் பிள்ளையார்
2} நிறை நாழி
3}திருவிளக்கு
4} கலசகும்பங்கள்
அமைத்து அழல் ஓம்பத் தேவையான , அழல் குண்டமும் அமைத்து ஆயத்தமாகவேண்டும் .

1 } திருவிளக்கு ஏற்றுதல் : -

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே .           ( அப்பர் )

2} விநாயகர் துதி : -

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுரை இறையே .     ( சம்பந்தர் )

3}  நால்வர் துதி : - 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி .


4} புனித நீர் வழிபாடு : -

களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துக் தொழுது முன் நின்ற இப்பத்தரை கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அவர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஜயாறன் அடித்தலமே .

கடல்களின் அரசே வருணா போற்றி
நன்னீர்ப் பெருங்கடல் பொன்னே போற்றி
நீருக்கதிபதி நிறைவே போற்றி
மகரவாகனம் மகிழ்ந்தாய் போற்றி
புனிதன் சடைஅமர் வனிதை போற்றி
கங்கையென்னும் மங்கை போற்றி
யமுனை நதியெனும் நல்லாய் போற்றி
நருமதை நதியாம் நல்லருள் போற்றி
சிந்து நதியின் சிறப்பே போற்றி
காவிரி நதியாய்க் காப்பாய் போற்றி
துங்கா நதி நங்கா போற்றி
ஆன் பொருனை அரசி போற்றி
தண் பொருனைத் தாயேபோற்றி .

5 } திருக்குட ( கலசம் ) வழிபாடு : -

                          திருக்குடங்களில் சிவனையும் உமையம்மையையும் எழுந்தருளச் செய்தல் ( ஆவாகனம் ) .மணவிழா நடத்தும் குருக்கள் தம்மிரு கைகள் நிறைய மலர் எடுத்துத் தலைக்குமேல் கைகுவித்து , இறைவனையும் ,
இறைவியையும் திருக்குடங்களில் எழுந்தருளுமாறு வேண்டிக் கைகளை தம் மார்புக்கு நேராகக் கொண்டு வந்து , கீழ்வரும் பாடல் பாடியவுடன்
   
        இடம் கொண்டருள்க இறைவா போற்றி
        வடிவத்துறை வள்ளலே போற்றி
        அருள் ஒளி தருக அம்மையே போற்றி

திருக்குடங்களின் மேல் தன்கையில் உள்ள மலரைத் தூவ வேண்டும் .


6 ) மணமகன் மேடைக்கு வருகை : -

                                தெய்வ வழிபாடு : ( மாதா , பிதா , குரு , தெய்வம் )

பெற்றோர் வழிபாடு : -

                                மேடைக்கு அருகில் வடபுறம் , இரு நாற்காலிகளில் தாயையும்  தந்தையையும் அமரச்செய்து , ஒரு தாம்பாளத்தில் தந்தையின் வலப்பாதமும்  
தாயின் இடப்பாதமும் வைத்து மணமகன் , அவர்களின் பாதங்களில் நீர் ஊற்றி நன்கு கழுவி , பால் ஊற்றி , மலர்தூவி , கற்பூர ஒளி காட்டவும் .

பாடல் :-

அரவனையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட்கெல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரைவிரவு தென்கெடில் நாடன் அடி
திரு வீரட்டானத்து எம்செல்வன் அடி .               ( அப்பர் )