Thursday, August 11, 2011

சீமந்தம் - 5 ம் மாதம் சடங்கு

5 ம் மாதம் சடங்கு : - பெண் கருவுற்று 5 மாதங்கள் நிறைந்த பின்பு பெண்ணின் பெற்றோர் , பெண்ணிற்கு 5 வகை பழங்களும் ( திராட்சை , கொய்யா , பேரீட்சை , வாழைப்பழம் , ஆரஞ்சு ) கருப்பு சேலை , ரவிக்கையும் , கருப்பு வளையல்களும் கொண்டு சென்று பெண்ணை பார்த்து வருவது மரபு .

சீமந்தம் ( வளைகாப்பு )

கருவுற்ற பெண்ணை ஏழாவது மாதத்தில் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு முன் செய்ய வேண்டிய வைபவம் . ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து ( ஒரு கன்னிப் பெண்ணிற்கு வளையல் , வஸ்தரம் ,தானம் கொடுப்பது மரபு ) பூஜை செய்து பின்பு பெண்ணை அந்த சுபவேளையில் விளக்கு பக்கத்தில் மாப்பிள்ளையுடன் இருத்தி தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த புத்தாடைகளை அணிவித்து , பின்னர் ஊரில் உள்ள கோவில் அம்பாளுக்கு அணிவிப்பதற்கு கருப்பு வளையல்கள் எடுத்து வைத்து விட்டு பிறகு ஒரு சிறுமியை முன் இருத்தி அவளுக்கு வளையல்கள் அணிவித்து சிறப்புச் செய்துவிட்டு அதன் பின் பெண்ணுக்கு தாய் , தகப்பனார் அய்ம்பொன் சூல் வளையல்களையும் , மெழுகு வைத்த தங்கம் , வெள்ளி செய்த வளையல்களையும் அணிவித்து பி மாப்பிள்ளை வீட்டார் உறவினர்கள் போன்றவர்கள் பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து பெரியவர்கள் ஆசிர்வதிக்கவேண்டும் . இந்த வைபவத்திற்கு வருகை தந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் பெண்வீட்டிலிருந்து கொண்டு வந்த சீமந்த பலகாரங்கள் விநியோகிக்கப்படவேண்டும் . பெண் குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் கண்ணாடி வளையல்கள்அணிய கொடுககவேண்டும் . பிறகு நல்ல நேரம் பார்த்து பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் . அப்படி பெண் போகும் பொழுது , பெண்ணை கணவன் பார்ப்பது கிடையாது .

Friday, July 29, 2011

திருமண சடங்குகளும் - விளக்கமும்

1 ) நாட்கால் நடல் : - கொட்டைகைகாலில் உபயோகிக்கும் மாவிலை , நவதானியம் , பருத்திக்கொட்டை , வெள்ளி நாணயம் , பூ , சிவப்புத்துணி , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுதல் .

2 ) பொண்ணுருக்கி விடுதல் : - திருமாங்கல்யம் சுமங்கலியின் சின்னம் . போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகளில் ஒன்று . எனவே நல்ல நாளில் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யும் பணியைத் துவக்குதல் .

3 ) கலப்பரப்பு : - மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .

4 ) காப்புக் கட்டுதல் : - கப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது.

5 ) முளைப்பாலிகை : - நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6 ) தாரை வார்த்தல் : - தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செஉயப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

7 ) மூன்று முடிச்சு : - இறைவன் , தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு . முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு .பெற்றோர்கள் , திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு . அறம் , பொருள் , இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு .பிரம்மா , விஸ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது . கணவன் , மூத்தோன் , இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு . நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதி உறுதியாக இருக்கிறோம் என்பதைக் கட்ட மூன்று முடிச்சு .

8 ) ஹோமம் வளர்த்தல் : - வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கும் , மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9 ) கும்பம் வைத்தல் : - கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் .

கும்பவஸ்திரம் ------------------- உடம்பின் தோல்
நூல்-------------------------------- நாட நரம்புகள்
குடம் ------------------------------ தசை
தண்ணீர் -------------------------- இரத்தம்
நவரத்தனங்கள் ------------------ எலும்பு
தேங்காய் ------------------------- தலை
மாவிலை ------------------------ தலைமயிர்
தருப்பை ------------------------- குடுமி
மந்திரம் -------------------------- உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

10 ) அம்மி மிதித்தல் : - கற்பிக்கப்படுவது கற்பு . கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும் . சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளையாது . வாழ்வில் எவ்வளவு சோதனை வந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதர்கான நிகழ்ச்சி .

11 ) அருந்ததி பார்த்தல் : - வ்சிஸ்டரின் மனைவியாகிய அருந்ததி கற்பின் திறத்தல் , ஒர் நட்சத்திரத்திற்கு அதி தெய்வமாகி , அந்த நட்சத்திரம் அருந்ததி நட்சத்திரம் என்று சிறப்புப் பெற்றது . கற்பு நெறியில் சிறிது வழுவிய அகலிகை கல்லாகக் கிடக்குமாறு சாபம் பெற்றார் . இந்த உண்மையை உணர்த்துவதற்காக் அம்மி மிதித்து , அருந்ததி பார்க்கும் சடங்கு வைக்கப்பட்டுள்ளது .சைவ மரபில் கற்ப்புக்கு எடுத்துக்காட்டாக அருந்ததியை குறிப்பிடுகிறார்கள் .

12 ) ஏற்றி இறக்குதல் : - மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .

13 ) அடை பொரி : - பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் .

14 ) நிறை நாழி : - நித்தமும் திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் .

15 ) ஒலுசை : - மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார் கொடுப்பது . ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்கத்தற்கது .

16 ) மணமகள் பொங்கலிடுதல் : - முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நகழ்ச்சி . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது . புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறி .

17 ) பிள்ளை மாற்றுவது : - எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் . இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம் . பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்க அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது . திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ - திருவள்ளுவர் . நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18 ) மறுவீடு : - மணமகளின் பெற்றோரும் - உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று - விருந்துண்ட் மகிழ்ந்து - உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே - ம்றுவீடு .

19 ) கோவிலுக்கு அழைத்துச்செல்லல் : - நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .

Friday, April 8, 2011

திருமண சடங்குகள் -11

திருமணத்திற்கு மறுநாள் காலை நிகழ்ச்சி : - அதிகாலையில் மணப்பெண் நீராடி பொங்கல் இட்டுத் தீப பூசை செய்து காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும் .
மணவறையில் மாப்பிள்ளை விளக்கின் அருகிலும் மாப்பிள்ளைக்கு இடது புறம் பெண்ணும் கிழக்கு முகமாக அமர , பெரியவர் ஒருவர் தட்டிலுள்ள புழுங்கலரிசியை மாப்பிள்ளை கையால் இருமுறை எடுத்துப் போடச் செய்து , மூன்றாம்முறை எடுத்த அரிசியை கையில் வைத்துக் கொண்டு அரிசியின் மேல் ஒரு வாழைக்காயை வத்து , முதல் நாள் கட்டிய காப்பினை கத்திரியால் அறுக்க வேண்டும் . இவ்வாறே பெண்ணுக்கும் செய்து பெண் கையில் கட்டியுள்ள காப்பினை அறுக்க வேண்டும் .

பிள்ளை மாத்து : - ஒரு தாம்பாளத்தில் பட்டுத் துணியை மடித்து விரித்து அ தன் மேல் பிள்ளையை ( பித்தளை அல்லது வெள்ளி )வைத்து நகை அணிந்து ,பெண் மாப்பிள்ளையிடமும் மாப்பிள்ளை பெண்ணிடமும் மூன்று முறை கொடுத்து வாங்க வேண்டும் .

மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் .

மாப்பிள்ளையின் சகோதரி மணவறையில் ஏறி ஏற்றி இறக்க வேண்டும் .ஒரு சகோதரி மணமக்கள் பின் நின்று கொள்ள வேண்டும் .சந்தணகும்பா , குங்குமம் இருகைகளிலும் வைத்துக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . இதே போல் பன்னீர் செம்பும் நிறை நாழியும், பின் தேங்காயும் விளக்கையும் தொட்டுக் கொண்டு ஏற்றி இறக்க வேண்டும் . அடை பொரியை மணமக்களை மூன்றுமுறை சுற்றி கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் போட வேண்டும் . அதன்பின் பெரியவர்கள் திறுனீறு பூசி ஆசீர்வதம் செய்ய வேண்டும் .பிள்ளை மாற்றுச் சுருள் கொடுக்க வேண்டும் .ஏழாம் நீர்ச் சுருள் கொடுக்க வேண்டும் .பின் ஆரத்தி எடுக்க வேண்டும் .

மணமக்கள் மணவறையை மூன்று முறை வல்ம் வந்தபின் . மஞ்சள் . சுண்ணாம்பு ,வெற்றிலை கலந்த நீர்க்கொப்பரையில் , ஒருவர் ஒரு மோதிரத்தையும் , மடக்குக் கத்தியையும் போட்டு மணமக்களை எடுக்கச் செய்ய வேண்டும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் சென்று ,பாலும் ப்ழமும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளைஉடன் பிறந்த சகோதரிகளுக்கு பலகாரங்களும் , சுருளும் வழங்கிய பின் பலகாரப்பந்தி நடத்த வேண்டும் . மதிய உணவிற்குப் பின் , மாலைகள் ,முளைப்பாலிகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து அருகிலுள்ள நீர் நிலைகளில் ( வாய்க்கால் , ஆறு , தெப்பக்குளம் ) முளைப்பாலிகைகளுக்குப் பூசைசெய்து விட வேண்டும் . வந்துள்ள மகளிருக்குச் சந்தனம் , குங்குமம் , பூ ஆகியன கொடுக்க வேண்டும் .

அன்று மாலை மணமக்கள் பெற்றோர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும் .

மறு வீடு , மனை புகுதல் , தாலி பெருக்குதல் , இரண்டாம் மறுவீடு : - முகூர்த்தப் பட்டோலையில் குறித்துள்ள நேரத்தில் மணமக்கள் மறுவீடு செல்ல வேண்டும் .மாப்பிள்ளையின் சகோதரி தம்பதியரை அழைத்துச் செல்ல வேண்டும் .மாப்பிள்ளை வீட்டில் புது மணதம்பதிகளுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து மறுவீடு புக வேண்டும் .வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதியரை அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும். பின் மணப்பெண்ணை சமையல் அறைக்கு அழைத்துச் சென்று மணப்பெண் உப்பு பாணையை தொட வேண்டும் .

தாலி பெருக்கம் ; - ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின்முன் அமர்த்தி , ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல்யத்தை மாப்பிள்ளைவீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் தாலியை மாற்றி கோர்க்க வேண்டும் . இந்த சடங்கை முதிர்ந்த சுமங்கலி பெண் செய்து கொடுப்பது உத்தமம் . தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக்கூடாது .

ஒரு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தம்பதியர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்வீட்டிற்கு செல்ல வேண்டும் . பெண்வீட்டில் மாப்பிள்ளைக்கு விருந்து கொடுத்து சுருளும் கொடுக்க வேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பு முதல் ஒரு வருடம் முடியும் வரை கொடுக்க்க வேண்டிய சுருள் விபரங்கள் ; -

சுருள் விபரம் ******தொகை*****பெறவேண்டியவர் **கொடுக்க வேண்டிய சமயம்

மாப்பிள்ளை
அழைப்பு*********தகுதிக்கு ஏற்ப***மாப்பிள்ளை **மாப்பிள்ளை அழைப்பின் போது

திரு நாண்******ரூ 51/= தகுதிக்கு ***மாப்பிள்ளையின் *****மணவறையில்
பூட்டு***********ஏற்ப ****************சாகோதரி

கைப்பிடி *****தகுதிக்கு ஏற்ப*****மாப்பிள்ளை சகோதரிஅந்த நிகழ்ச்சியின் போது

சட்டரசம் ***தகுதிக்குஏற்ப***மாப்பிள்ளை சகோதரி**அந்த நிகழ்ச்சியின்போது

விநாயகச் சுருள் கணிசமான தொகை ***மாப்பிள்ளை***திருமண நாள் இரவு
**********************************************************ஒலிசை வைக்கும் போது

ஆனந்த சுருள்**தகுதிக்கு ஏற்ப*மாப்பிள்ளையின் சகோதரி**மறு நாள் அதிகாலை

பலகாரச்சுருள் ===சிறியதொகை +இனிப்பு,காரப்பலகாரங்களுடன் மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கவேண்டும் ==மாப்பிள்ளை சகோதரி

பிள்ளை மாற்றுச் சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

ஏழாம் நீர்ச்சடங்கு == சிறிய தொகை == மாப்பிள்ளையின் சகோதரி

மறுவீடு ===கணிசமான தொகை / பெண்வீட்டார் சர்க்கரைபொங்கல் கொண்டுபோகவேண்டும் == மாப்பிள்ளை க்கு = மறுவீடு மனைபுகும் சமயம்.

நல்லமாதம் பழம் போட ==தேவையான பணம் வேண்டும் ==மாப்பிள்ளையின் தந்தையிடம் ==மறுவீடு சமயம் .

இரண்டாம் மறுவீடு ==கணிசமான தொகை (மறுவீட்டிற்கு கொடுத்ததைவிட குறைவாக )== மாப்பிள்ளையிடம் == இரண்டாம் மறுவீடு வந்த சமயம் .

சித்திரைச் சுருள் == சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == சித்திரை மாதம் பிறக்கும் முன் பங்குனியில் .

ஆடிச்சுருள் ==சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் ==ஆனி மாத கடைசியில் .

புரட்டாசி == சிறிய தொகை == மாப்பிள்ளையிடம் == நவராத்திரிக்கு முன்னதாக .

தீபாவளி ==மணமக்களுக்கு புத்தாடையுடன் கணிசமான தொகையும் ==மாப்பிள்ளையிடம் == தீபாவளிக்கு முன்பாக .

கார்த்திகை ==பொரி,வெல்லம்,கர்த்திகை விளக்கு புதுசேலையுடன் சிறிய தொகை ==மாப்பிள்ளையிடம் == திருக்கார்த்திகைக்கு முன்பாக .

தைப்பொங்கல் == வெங்கலப்பானை,சருவச்சட்டி,அகப்பை,குத்துவிளக்கு,மணமக்களுக்கு புத்தாடை, பச்சரிசி,வெல்லம்.கரும்பு,காய்கறிகளுடன் சுருள்==மாப்பிள்ளையிடம்== தைப்பொங்களுக்கு முன்பாக .

மாசிச்சுருள் == சிறிய தொகை == மாப்பிள்ளயிடம் == சிவராத்திரிக்கு முன்பாக .

தீபாவளி . பொங்கல் சுருள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கொடுப்பது மரபு .
சுருள் பெறும் பொழுது பெற்றோரின் அனுமதியைப்பெற்று மணமகன் சுருளை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

Tuesday, April 5, 2011

திருமண சடங்குகள் - 10

எண்ணெய் சடங்கு ; - இரு கிண்ணங்களில் எண்ணெய , சீயக்காய்ப்பொடி , மஞ்சள் பொடி , இவற்றை ஒரு தட்டில் வைத்து மணவறையில் வைக்க வேண்டும் .பின் மணமக்கள் இருவரும் மாலைகள் அணிந்து வந்து பெண் வலப்புறமும் , மாப்பிள்ளை இடப்புறமும் மணவறையில் அமர வேண்டும் .மணமகளின் தம்பி , ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் மூன்று முறை எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் .பின் சீயக்காய்ப்பொடியை மும்முறை தொட்டு வைக்க வேண்டும் .இதே போல் மணமகளுக்கும் எண்ணெய் மூன்று முறையும் , சீயக்காய்ப்பொடி மூன்று முறையும் , ம்ஞ்சள் பொடி மூன்று முறையும் தொட்டு வைக்க வேண்டும் .
மாப்பிள்ளை தன் மைத்துனருக்குத் தங்க மோதிரம் , புத்தாடைகள் , தேங்காய் ,பழங்கள் , வெற்றிலை ,பாக்கு வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின் மணமகள் ஆட்காட்டி விரலால் மாப்பிள்ளை தலையில் எண்ணெய் மூன்று முறை , சீயக்காய்ப்பொடி மூன்று முறை தொட்டு வைக்க வேண்டும் .அடுத்து மாப்பிள்ளை பெண்ணுக்கு எண்ணெய மூன்றுமுறையும் , சீயக்காய்ப்பொடி மூன்றுமுறையும் ,மஞ்சள் பொடி மூன்றுமுறையும் தொட்டு வைக்க வேண்டும் .
பின்பு மணமக்களை நீராட அழைத்துச் செல்ல வேண்டும் .

நீராடியபின் மாப்பிள்ளையை மட்டும் ஆடைகள் மாற்றி இரு மாலைகள் அணிவித்து , மணவறைக்கு அழைத்து வர வேண்டும் .இதற்கு முன் பெண்ணின் தந்தையார் தமக்கு மூத்த மருமகஙள் இருப்பின் அவர்களுக்கு சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் . மருமகனை மணவறையில் உட்கார வைத்து பன்னீர் தெளித்து ,சந்தனம் , குங்குமம் கொடுத்து மஞ்சள் தடவிய தேங்காய் , வெற்றிலை ,பழங்கள் , பாக்கு முதலியனவற்றுடன் சுருள் வைத்து கொடுக்க வேண்டும் .அத்ன் பின்பே மாப்பிள்ளைக்கு விநாயகச்சுருள் வைத்துக் கொடுக்க வேண்டும் .

முன்னதாக மணவறைக்கு முன்பு ஒலிசைச் சாமாகளை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் . இப்பொழுது ஒலிசை சாமான்கள் அடுக்கி வைப்பதற்குப் பதில் இன்ன இன்ன சாமான்கள் இருக்கின்றன என எழுதி வாசித்து விடுகின்றனர் .
மணமக்களுக்க்றிய ஒலிசை ஜவுளிகளை மாப்பிள்ளையின் முன் ஒரு தாம்பாளத்தில் வைத்து , மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , சந்தனம் , குங்குமம் வழங்கி விநாயகச் சுருளை வைத்து கொடுக்க வேண்டும் .

வி நாயகச்சுருள் வகைச் சாமான் கள் : - விரலி ம்ஞ்சள் , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,வெற்றிலை , பாக்கு , ஒரு சீப்பு பழம் , பூ ஆரம் 2 .

பின்பு மாப்பிள்ளையின் சகோதரியானவள் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் போது தங்கம் / பணம் கொடுத்திருந்தால் , அவள் கணவரை மணவறையில் அமர்த்தி, மாப்பிள்ளை அவருக்கு மாலை அணிவித்து ,பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி அவர்கள் முன் கொடுத்த தங்கத்தின் விலைப் பணத்துடன் சுருளும் வைத்துக் கொடுக்க வேண்டும் . அதன் பின் மாப்பிள்ளையை உட்காரச் வைத்து சகோதரியின் கணவர் பன்னீர் தெளித்து , சந்தணம் , குங்குமம் வழங்கி மாப்பிள்ளைக்கு சுருள் கொடுக்க வேண்டும் .பின் அனைவருக்கும் தாம்பூலம் கொடுக்க வேண்டும் . பிறகு இரவு உணவு அருந்த வேண்டும் .

சாந்தி முகூர்த்தம் : - மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும் . பால் , பழங்கள் , ம்ற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும் . மணமகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள் . மறு நாள் காலையில் அந்த சகோதரிக்கு ஆணந்தச் சுருள் கொடுக்க வேண்டும் .

Monday, April 4, 2011

திருமண சடங்குகள் - 9

நலுங்கு நிகழ்ச்சி : - மாலையில் மாப்பிள்ளை கிழக்கு முகமாகவும் , பெண் மேற்கு முகமாகவும் அமர்ந்து , தேங்காய் உருட்டலும் ,பூப்பந்து எறிதலும் , பல்லாங்குழி ஆடலும் செய்வர் . அதன் பி பெண் எழுந்து மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து , வலது கால் பாதத்தில் சந்தனம் பூசிக் குங்குமம் இடல் வேண்டும் .

அடுத்து மாப்பிள்ளை உட்கார்ந்தபடியே பெண் குனிந்து கொடுக்க அவளுக்குப் பன்னீர் தெளித்து , வலது கையின் பின்புறம் சந்தனம் பூசிக் குங்குமமும் இட வேண்டும் .பின் சுட்ட அப்பளங்கள் 12 தயாராக வைத்துக் கொண்டு , பெண் எழுந்து நின்று , 2 அப்பளங்களை மாப்பிள்ளையின் தலையைச் சுற்றி தட்ட வேண்டும் .இதே போல் மணமகள் 3 முறை செய்ய வேண்டும் . அவ்வாறே மாப்பிள்ளை கீழே அமர்ந்து கொண்டு பெண் குனிந்து கொடுக்க அவள்தலையைச்சுற்றி இரண்டிரண்டாகா அப்பளங்களைத் தட்ட வேண்டும் .பிறகு ஆரத்தி எடுத்து , மணமக்களை மனைக்குள் அழைதுதுச் செல்ல வேண்டும் .

திருமண சடங்குகள் -8

திரு நாண் பூட்டு : - மாப்பிள்ளையின் சகோதரி ( திருமணம் ஆனவள் ) மணவறையில் ஏறியதும் , அவளுக்குச் சந்தனம் , குங்குமம் ,பூ ஆகியன கொடுத்தல் வேண்டும் . அவள் பூவை தந்தாலியில் வைத்தபின் , திருமாங்கல்யத்தை தன் கழுத்தின் பின்புறம் மாற்றிக் கொண்டு , மணமகளுக்கு மணமகனுடன் சேர்ந்து
திருப்பூட்டி மூன்று முடிச்சுகள் போட வேண்டும் .
திருப்பூட்டியபின் மாப்பிள்ளையின் சகோதரி , தனது திருமாங்கல்யத்தைத் தனது கழுத்தின் முன்புறம் இட்டுக் கொண்டு , மணமகள் திருமாங்கல்யத்தில் சந்தனம் , குங்குமம் , பூ வைக்க வேண்டும் .அதன் பின் மணவறைக் கால் நான்கிற்கும் கன்னி மூலையில் இருந்து தொடங்கிச் சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும் .

அடுத்து மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து , மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும் .பின் மாப்பிள்ளையின் சகோதரிகள் ஏற்றி இறக்குதல் செய்ய வேண்டும் .பிறகு அடை பொரி சுற்றி நான்கு புறமும் இட வேண்டும் .

அதன்பின் மணமகன் சகோதரிக்கு , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , பூ இவற்றுடன் திருப்பூட்டுச் சுருள் கொடுக்க வேண்டும் .

பின் மணமக்கள் வலக்கைகளைச் சிவப்புப் பட்டுத் துணியால் கட்ட வேண்டும் .சிவப்புத் துணியை பெண்ணின் தகப்பனார் கட்டி விட வேண்டும் . குருக்களைய்யா அல்லது குடும்பத்தில் பெரியவர்கள் இதைச் செய்யலாம் .

பின் மணமக்கள் மணவறையைச் சுற்றி வலம் வருவார்கள் . அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மணமகள் தன் வலது பாதத்தைத் தூக்கி அம்மி மீது வைக்க வேண்டும் .அவள் அந்த கல்லைப் போல் உறுதியான மனனிலையுடன் இருப்பதன் அடையாளம் அது . மணமகன் தன் பத்தினிக்கு அருந்ததி இருக்கும் திக்கைக் காட்டி அதனை தரிசிக்க செய்ய வேண்டும் .பெரியவர்களின் ஆசீர்வதம் , வாழ்த்துதல் ,திரு நீறு பூசுதல் ஆகியவை நிகழும் .முடிவில் ஆரத்தி எடுக்க வேண்டும் .

அதன்பின் மணமக்களை மனையினுள் ( மாப்பிள்ளையின் அறையினுள் ) அழைத்துச் செல்வர் .மணமகள் மாப்பிள்ளையின் ச்கோதரிக்கு கைப்பிடிச் சுருள் கொடுத்துக் கட்டை அவிழ்க்கச் செய்ய வேண்டும் .பாலும் பழமும் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .
குறித்த நேரத்தில் மாப்பிள்ளைக்குப் பெண் சட்டரசம் பரிமாற வேண்டும் . மாப்பிள்ளையின் சகோதரிக்கு சட்டரசச் சுருள் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்குடன் கொடுக்கவும் .பின் மணமக்களை மனையினுள் அழைத்துச் செல்வர் .

Saturday, April 2, 2011

திருமண சடங்குகள் - 7

கன்னி ஊஞ்சல்

கன்னி ஊஞ்சல் பாட்டுப் படும் வகைக்காக ஒதுவார் , நாதஸ்வர வித்துவான் இருவருக்கும் தேங்காய் , பழங்கள் , வெற்றிலை ,பாக்கு ,இவற்றுடன் தட்சணை (பணமும் ) கொடுத்துப் பாடச் செய்ய வேண்டும் .

கன்னி ஊஞ்சல் பாட்டு

சீரார் பவளங்கால் முத்த்ம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போரார்வேல் கண்மடவீர் பொன்னுஞ்சல் ஆடாமோ .


மூன்றுஅங்கு இலங்கு நயனத்தான் மூவாத
வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்து அமுதூறித் தாந்தெளிந்தாங்கு
ஊந்தங்கி நின்று உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோந்தங்கு இடைமருது பாடிக் குல்ம்ஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனி உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் ! பொன்ணூஞ்சல் ஆடாமோ .

மேலே கண்ட மூன்று பாடல்களும் பாடியபின் , மணமகள் வலமாக வந்து
மணமகனுக்கு இரு மாலைகள் சூட்டி , மணமகன் வலக்கை மோதிர விரலில்
மோதிரம் போட வேண்டும் .(இந்த இடத்தில் மணமகள் மட்டுமே மணமகனுக்கு மாலை போடவேண்டும் . மணமகன் மணமகளுக்கு மாலை போடக்கூடாது . )பின்
மணமகன் , மணமகளுக்கு மோதிரம் அணிய வேண்டும் .அதன்பின் மணமக்கள்
மணவறைக்கு வரவும் , மணமகள் மணமகனுக்கு வலப்புறம் மணவறையில்
அமர்தல் வேண்டும் .

கன்னிகாதானம் -( தாரை வார்த்து கொடுக்கும் சடங்கு )
மணமகள் வலது கையின் அடியில் மணமகன் வலதுகையையும் , அவற்றிற்குக் கீழ் மணமகன் த்ந்தையார் , தாயார் கைகளும் இருக்கவேண்டும் .
மணமகள் கையில் வெற்றிலை ,பாக்கு , பழங்கள் ,தேங்காய் வைத்து , மணமள் தந்தையாரும் தாயாருமாகப் பால் ஊற்றி கன்னிகாதானம் செய்வது மரபு .

Thursday, March 31, 2011

திருமண சடங்குகள் -5

நிச்சயதார்த்த சடங்கு : -

ஒரு தாம்பாளத்தில் நிச்சயதார்த்தத்துக்குறிய பொருட்களை வைத்து , பெண்ணை , விளக்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக அமரச்செய்து தீப பூசை செய்தல் வேண்டும். பின் பெண்ணிற்கு மாப்பிள்ளையின் சகோதரி பன்னீர் ,சந்தனம் , குங்குமம் அளித்தி பெண் கையில் மேற்படி தாம்பாளத்தைக் கொடுக்கவேண்டும் .பிறகு சேலையைக் கட்டிவரச் செய்து மீண்டும் கிழக்கு முகமாக அமர்த்தி , விரவிய பாக்கு , மஞ்சளை இருமுறை கையால் எடுத்துப் போட்டு , மூன்றாம் முறை கையில் வைத்துக் கொள்ள அத்ன் மேல் வெற்றிலை , பாக்கு , 2 பழம் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு இருபங்கும் , அவ்வாறே பெண் வீட்டாருக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் .

கலப்பரப்பு : -

மணப்பெண் புத்தாடையும் மாலையும் அணிவித்து கலப்பரப்பிடும் போது , மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் ( தரையில் விரித்து ) பரப்பி அதி அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் கொடுக்கவேண்டும் . நிச்சயார்த்த சடங்கின் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு 2 பங்கு கொடுத்திருந்தால் , இப்பொழுது மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு பங்கும் , பெண் வீட்டாருக்கு 2 பங்கும் கொடுக்கவேண்டும் . கலப்பரப்பு சேலை மணமகளின் தங்கைக்கு கொடுக்கவேண்டும் .

மணமேடையில் வழிபாடுகள் : -

மணவறை இடத்தைப் பெருக்கி , பசுவின் சாணத்தால் மெழுகி , அத் உல்ர்ந்த பின் மாக்கோலம் போடவேண்டும் ..
ஆசான் இருக்கைக்கு மேல்புறம் தென்வடலாக ஒரு வாழையிலையைக் கிழக்கு நோக்கி விரித்து, அத்ன் மேல் தென்கோடியில் மஞ்சளால் ஆன பிள்ளையார் , நிறை நாழி , நெல் , திருவிளக்கு இவைகளை கிலக்குமுகமாக வைக்க வேண்டும் . அவற்றிற்குத் திருனீரு , சந்தனம் , க்ங்குமம் , பூச்சரம் சாத்தவேண்டும் .

வழிபாடுகள் விபரம் : - 1 ) வினாயகர் பூசை , 2 ) திருவிளக்கு பூசை , 3 ) புனித நீர்க்கலசபூசை , 4 )பஞ்ச கவ்விய பூசை , 5 ) சந்திர கும்ப பூசை , 6 ) முளைப்பாலிகை பூசை , 7 ) சிவகும்பபூசை, சக்தி பூசை , 8 ) நவக்கிரக பூசை , 9 ) திருமாங்கல்ய பூசை , 10 ) அழல் ஒம்பல் ( தீ வளர்த்தல் ) , 11 ) அழலில் சுள்ளியிடல் (ஒமம் )
முன்னதாக கும்பங்களில் ஆவாகணம் செய்யப்பட்ட தேவதைகட்கும் , உமா மகேஸ்வரர்கட்கும் , நவக்கிரகங்கட்கும்

Thursday, March 24, 2011

திருமண சடங்குகள் -4

மாப்பிள்ளை அழைப்பு : -

மாப்பிள்ளை வெளியூரில் இருப்பினும் , உள்ளுரில் இருப்பினும் அவரை , அவர் இல்லத்தில் இருந்து திருமணம் நிகழும் ஊரில் திருமண நாள்வரை அவ்ர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அல்லது திருமண வீட்டிற்கு அழைத்து வர பெண்வீட்டிலிருந்து பெண்ணும் ஆணும் போவது வழக்கம் .மாப்பிள்ளையை அழைத்துவரப் பிரயாணத்திற்குரிய ஏற்பாடுகளை முன்பாகவே செய்து கொண்டு , மாப்பிள்ளை அழைப்புச்சுருள் , தாம்பூலம் முதலியவுடன் இவற்றிற்குரிய பணத்துடனும் , ஒரு பாத்திரத்தில் லட்டு அல்லது மைசூர்பாகு அல்லது பாதூஸா போன்ற இனிப்பு பண்டங்களில் ஒன்றுடன் செல்லவேண்டும் .

மாப்பிள்ளை அழைப்பிற்கு பெண்வீட்டார் கொண்டு செல்ல வேண்டியவை :-

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 , விளக்கிற்கு ட்ய்ஹேங்காய் 1 ,பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி மஞ்சள் 100 கிராம் ,பாக்கு 100 கிராம் ,மாப்பிள்ளைக்கு ஆரம் 2 , இனிப்புப் பொருள் , சரப்பந்து , விடலைத் தேங்காய்கள் , சுருள் பணம் .

பெண் அழைப்பு ஆயின் , நிச்சய தாம்பூலம் செய்து அழைக்க மாப்பிள்ளை வீட்டார் கொண்டு செல்லவேண்டிய பொருட்கள் ; _

விளக்கு ஆரம் 1 , மஞ்சள் பூசிய தேங்காய் 3 ,விளக்கிற்கு தேங்காய் 1 ,வெற்றிலை , பாக்கு , பழங்கள் ,சூடன் , பத்தி , சந்தணம் , குங்குமம் ,.
வெற்றிலைகட்டு ,பழம் 1 சீப்பூ ,விரலி மஞ்சள் 100 கிராம் , பாக்கு 100 கிராம் ,
பெண்ணிற்குஆரம் 2, தலைக்குப் பூத்துண்டு, பூச்சரப்பந்து.
மரகுங்குமச் செப்பு 2 ( நிச்சய தாம்பூலத்திற்கு 1 , திருமாங்கல்யம் வைக்க 1 )
பெண்ணீற்கு சேலை , சட்டை .

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிற்கும் , அவ்ள் தம்பிக்கும் செய்ய வேண்டியவை : -
திருமாங்கல்யம் , தங்க மோதிரம் , தாலிச்செயின் .
தங்க மோதிரம் , புத்தாடை ( பெண்ணின் தப்பிக்கு )
நிச்சயார்த்த சேலை , முகூர்த்தச் சேலை , கலப்பரப்பு சேலை .

மாப்பிள்ளை புறப்பட வேண்டிய நல்ல வேளையில் , ஒரு தாம்பாளத்தில் தேங்காய் 3 ( மஞ்சள் பூசியது ), வாழைப்பழம் 3 சீப்பு ,வெற்றிலை ,பாக்கு , விரலி மஞ்சள் , சந்தணம், பன்னிர் ,பூமாலை 2 ,பூச்சரப்பந்து 1 , இவற்ருடன் மாப்பிள்ளை அழைப்புச் சுருளையும் வைத்து , மாப்பிள்ளைக்குப் பன்னிர் தெளித்து , சந்தனம் குங்குமம் வழங்கி , இரு பூமாளைகளையும் அணிவித்து , பெண்களுக்குப் பூச்சரம் கொடுத்து , மாப்பிள்ளையிடம் தாம்பாலத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் . பின் பெரியவர்களிடம் திருனீறு பூசுவித்து மாப்பிள்ளையை அழைத்து வருவது மரபு .
முன்னதாகவே மாப்பிள்ளை அழைத்து வரப்ப்ட்டு வேறிடத்தில் தங்க வைத்திருந்தால் , திருமணத்தன்று காலை நல்வேளையில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரும் பொழுது , இரு மாலைகள் அணிவித்தும் , தாம்பூலம் கொடுத்தும் மரியாதை செய்து மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டும் . அப்போது மீண்டும் அழைபுச்சுருள் கொடுக்க வேண்டுவது .

திருமண இல்லத்தில் மாப்பிள்ளைக்கு வரவேற்பு : -

மாப்பிளை தங்குவதற்கு திருமண அறையில் முன்கூட்டியே கிழக்கு நோக்கி ஒரு வாழையிலையில் முறையே மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , ஆரம் சாத்திய திருவிளக்கு , அவற்ரின் முன் உடைத்த தேங்காய், பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,சந்தனம் , பன்னீர் , பத்தி , சூடன் , பூச்சரம் ,இவற்ரை வைத்திருக்கவேண்டும் .அடுத்து ஒரு நாற்காலி இட்டுத் தயாராக் இருக்கவேண்டும் .மாப்பிள்ளை திருமண இல்லத்திற்கு வந்ததும் ,வாசலில் மாப்பிள்ளையை கிழக்கு முகமாக் நிற்கவைத்து , இரு சுமங்கலிப்பெண்கள் , ஆரத்தி எடுக்கவேண்டும் .அத்ன்பின் மாப்பிள்ளையை அவ்ர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தியதும் , அங்குள்ள பிள்ளையார் , திருவிள்க்கு ஆகியவற்றுக்கு தூபதீபம் காட்டி மாப்பிள்ளைக்கு பெரியோர்கள் திருனீறு பூசிய பின் சிறிது பாலும் பழமும் மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் .

Wednesday, March 23, 2011

திருமண சடங்குகள் -3

திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்கி விடுதல் : -

குறிப்பிட்ட நான்னாளில் மணமகன் வீட்டில் திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் . இதற்குறிய தங்கத்தை மணமகனின் சாகோதரிகள் வழங்கவேண்டும்.
திருமாங்கல்யத்திற்கு புதிய பொன் தான் பயன்படுத்த வேண்டும் . ஒரு பொற்கொல்லரைச் சாதனங்களுடன் வரவழைத்து , நல்வேளையில் நாட்கால் நடுவதற்கு கூறியவிதமே வழிபாடு செய்து பொற்கொல்லருக்கு தேங்காய் ,பழங்கள் ,வெற்றிலை , பாக்கு ,ஆகியவற்றுடன் பணம் வைத்து நன்கொடையாக கொடுக்கவேண்டும் . பின் பொன்னை உருக்கச்சொல்லவேண்டும். குறித்த தேதிக்குள் திருமாங்கல்யத்தை ஒப்படைக்குமாறு கவனமாக பார்த்து கொள்ள் வேண்டும் .

முகூர்த்தக்கால் நாட்டல் : -

முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .

நாட்கால் : - அரசு , மா , பலா , மரத்தின் கம்பு 5 அட் நீளத்தில் செம்மண் , சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .

ம்ஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிற்ரால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும் .கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால் , நவதானியம் , சந்தனம் ,பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி , மாவிலையுடன் நிறைகுடம் , திருவிளக்கு ,தேங்காய் , பழங்கள் , தாம்பூலம் ( வெற்றிலை ,பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து , பந்தல்காரருக்கு திருனீறு ,சந்தனம் , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு , ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .

Tuesday, March 22, 2011

திருமண சடங்குகள் - 2

திருமணம் உறுதி செய்து கொண்டபின்பு கூடிய விரைவில் இரு வீட்டாரும் தத்தம் உடன்பிறந்தோர் , மைத்துனர் , மாப்பிள்ளைகள் , அவர்கள் சம்பந்திகள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கும் , மிகவும் வேண்டியவர்கட்க்கும் முன் அறிவிப்புச் செய்வது வழக்கம்.
அறிவிப்பு கடிதம் மாதிரி

அன்புடையீர் ,
என்னுடைய மகள் / மகன் ----------செல்வி / செல்வன் திரு-----அவர்கள்
மகன் / மகள் ---------செல்வன் / செல்வி------க்கு திருமணம் செய்ய --------தேதி உறுதி செய்யப்பட்டது. திருமணம்---------ஊர்--------இடத்தில்----மீ ( மாதம் )---ஆம்
நாள் --------( ஆங்கில்தேதி ) காலை மணி ---க்கு மேல் ----க்குள் நடைபெற இருக்கிறது. அச்சிட்ட அழைப்பிதழ் பின்னர் அனுப்பி வைகிகின்றேன் . முன் அறிவிப்பாக இக் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆதலின் தாங்கள் முன்னதாகக் குடும்பத்துடன் வந்து திருமணத்தை சிறப்பித்து மணமக்களை வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன் .

தங்களன்புள்ள,
( ஒப்பம் ) -------------
நல்ல ஒரு நாள் பார்த்து திருமண அழைப்பிதழ் அச்சுக்கு கொடுப்பது வழக்கம்.

திருமண் அழைப்பிதழ் மாதிரி
சிவமயம்

அன்புடையீர் ,

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நிகழும் மங்கள்கரமான கொல்லம் ஆண்டு--------ம்ளு--ஆண்டு-------ம் நாள்--------கிழமை----திதியும்-----
நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்-------மணிக்கு மேல் ----மணிக்குள்------லக்கணத்தில்


மணமகன் பெயர் --------------------மணமகள் பெயர்
த/பெ-------------------------------------------த /பெ
ஆகியேர்ர்கள் திருமணம் பெரியேர்ர்களால் நிச்சயித்த வண்ணம் ( நடத்தும் இடம் )------------------- நடைபெறும் . திருமணத்திற்கும் மற்றும் அதைச் சார்ந்த சகல் வைபவங்களுக்கும் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ( ம் ) .

அவ்வண்ணமே விரும்பும்-----------------------------இங்ஙனம் . ,



தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்


கடவுள் வழிபாடு

குலதெய்வம் , இஸ்ட தெய்வங்கட்குக் கானிக்கை ;-
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஸ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது தெய்வ பக்தியுள்ல குடும்பங்களின் மரபு .

இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம் :-
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும் , அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன் , இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய் , பழங்கள் ,வெற்றிலை , பாக்கு , பூ ,இவற்றுடன் வைத்து , அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.

அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்:-

முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்தபின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும் , உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு ம்ஞ்சள் தடவிய தெங்காய் , பழங்கள் , வெற்றிலை , பாக்கு ,விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்புச் சுருள் கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
முகூர்தபட்டோலையில் குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி ம்ஞ்சள் ,குங்குமுகம்,சந்தனம்,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய் ,மல்லிகைசரம்,கல்கண் டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.

Monday, March 21, 2011

திருமண சடங்குகள்

திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை : -
தாம்பூலம் மாற்றும் விசேடத்திற்கு அது நிகழும் இடத்தில் வ்ழிபாட்டுப் பொருட்களை கிழக்கு முகமாக வைத்து, விருந்தினர்கள் அமர விரிப்புகளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டாரின் தாம்பூல்த் தட்டுக்களையும் வ்ழிபடு தெய்வ உருவங்கள் முன் வைக்கவேண்டும்.

தாம்பூலம் மாற்றி கொள்வதற்கு வேண்டிய பொருட்கள் :-

வழிபாட்டிற்கு - சுவாமி படம், குத்து விளக்கு ( ஆரத்துடன் ),மஞ்சள் பிள்ளையார் , நிறை நாழி ,வாழை இலை ,உடைத்த தேங்காய்,பழம் - 4 அல்லது 6 ,தாம்பூலம் (வெற்றிலை பாக்கு ),ஊதுவத்தி,திரு நீறு,சாம்பிராணி,தீபக்கால், சூடன்,சூடன் தட்டு,சந்தனம்,குங்குமுகம்,உதிரி பூக்கள் (விடு பூக்கள் ),பன்னீர்,பன்னீர்செம்பு,சந்தனக்கும்பா

பெண்வீட்டார் , மாப்பிள்ளை வீட்டார் தாம்பூலம் மாற்றிக் கொள்ளத் தனித்தனி தாம்பாளத்தில் வைக்கவேண்டியவை : -

மஞ்சள் பூசிய தேங்காய் 3, பழம் சீப்பு 3 ,ஆரஞ்சு 3 ,ஆப்பிள் 3,மாம்ப்ழம் 3,திராட்சை1/2 கிலோ,சீனாக்கல்கண்டு,விரலிமஞ்சள் 100 கிராம்,வெற்றிலை கட்டு 1,பாக்கு 100 கிராம்,குங்குமச்செப்பு ( மரத்தினால் ஆனது) 1,சந்தனம்,பூமாலை 2,தலைக்கு பூத்துண்டு 1, தலைக்கு பூச்சரப் ப்ந்து.

முகூர்த்தபட்டோலை எழுதுவதற்கு வெள்ளைத்தாள் 2 , சிகப்பு மை பேனா
குறித்த நல்வேளையில் திருவிளக்கு ஏற்றி ஒரு சுமங்கலிப் பொண்ணைக் கொண்டு தெய்வங்களுக்லு தூப தீபம் காட்டச் செய்து வ்ழிபட்டு பின் சிகப்பு மையினால் முகூர்த்தபட்டோலை இரு படிவங்கள் எடுக்கச்செய்து அவற்றில் மஞ்சள் பூசி இரு தாம்பாளங்களிலும் வைக்கவேண்டும்

தாம்பூலம் கைமாறும் முன்பு , மணமகன் தந்தையாரும் , மணமகள் தந்தையாரும் உறுதி செய்யும் நாள் ஞாயிறு,திங்கள்,வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன் ,வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்ளவேண்டும். அதன் பின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணிவித்து,பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் . அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தையாருக்குச் சிறப்புச்செய்த் தாம்பூலத்தட்டை எடுத்து கொடுக்கவேண்டும் .பின்னர் முகூர்த்தபட்டோலையை சபை அறிய வாசிக்கவேண்டும்.
அடுத்து மணமகளை அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்குமுகமாக உட்கார வைத்து மாலை அனிவித்து எல்லோரும் திரு நீறு பூசி ஆசீர்வாதம் செய்யவேண்டும் . பிறகு விருந்தினர்களுக்கு பன்னிர், சந்தனம் முதலியன்கொடுத்து சிறப்பு செய்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் .

முகூர்த்தபட்டோலை மாதிரி படிவம்

மாப்பிள்ளை பெயர் :
மாப்பிள்ளையின் தந்தை பெயர் :
மாப்பிள்ளையின் ஊர் :

பெண் பெயர் :
பெண்ணின் தந்தை பெயர் :
பெண்ணின் ஊர் :
இருபேர்களுக்கும் பொருந்திய முகூர்த்தபட்டோலை

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளை முன்னிட்டு நிகழும் மங்களகரமான----------ம்ளு-------வருடம்----மாதம்-----தேதி--------கிழமையும்---- நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் அன்று மணி---க்கு மேல்-----க்குள்-----லக்னத்தில் திருமாங்கல்யதாரணம் செய்ய உத்தமம் .
சட்டரசம்

முகூர்த்தம் முடிந்ததும் ----மணிக்கு மேல்-----மணிக்குள் சட்டரசம் செய்ய உத்தமம்.
நிச்சய தம்பூலம்

----ம்ளு-----வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை------ நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்----மணிக்குள் நிச்சயதாம்பூலம் செய்ய உத்தமம்.

நாள் கால் நடல் பொன் உருக்குதல்

----ம்ளு-------வருசம்----மாதம்----ம்தேதிக்கு கிழமை-------மணிக்குமேல்---மணிக்க்ள் திருமாங்கல்யதாரத்திற்கு பொன் உருக்கவும் ,கொட்டகை கால் நடவும் ,மணவறை , ஆக்குப் பிறை நாள் செய்யவும், ம்ஞ்சள் வாங்கவும் , கோவிலுக்கு பாக்கு வைக்கவும் மற்றும் சுபகாரியங்கள் செய்யவும் உத்தமம் .

மாப்பிள்ளை அழைப்பு அல்லது பெண் அழைப்பு

----ம்ளு-----வருசம்------மாதம்---ம்தேதிக்கு ( --------) கிழமை--------- நச்சத்திரத்தில்------மணிக்குமேல்-----மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

மறுவீடு

----ம்ளு-----வருசம்-------மாதம்---ம்தேதிக்கு (------- ) கிழமை------- நட்சத்திரத்தில் ----மணிக்குமேல்------மணிக்குள் அழைத்துவர உத்தமம் .

சாந்தி முகூர்த்தம்

------ம்ளு-------வருசம்------மாதம்----ம்தேதிக்கு (--------) கிழமை இரவு -----மணிக்குமேல் சாந்தி முகூர்த்தம் .

Sunday, March 20, 2011

ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா

பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும். ( முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம்.தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்

வித்யாரம்பம் - ஏடு தொடங்குதல்

குழந்தைக்கு 3 வயதுக்குள் ஒரு நல்ல தினத்தில் ஒரு குருவை வைத்து ஏடு தொடங்கவேண்டும் .( எழுத படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும் ). வழக்கமாக விஜயதசமி அன்று ஏடு தொடங்கவேண்டும். திருவிளக்கின் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி , குழந்தையின் கையில் விரலி ம்ஞ்சளை கொடுத்து , குரு குழந்தையின் விரலை பிடித்து - வித்யா மந்திரத்தை 3 முறை எழுதி - எழுத்து ஆரம்பித்து வைக்கவேண்டும்,

Saturday, March 19, 2011

ஹோமத்திற்குறிய பொருட்கள்

விரலி மஞ்சள்,மஞ்சள் பொடி,திரவியம்,வாசனை சந்தனம்,குங்குமம்,ஜவ்வாது விபூதி,கட்டிசூடன்,சாம்பிராணி,அகர்பத்தி,புவனெஸ்வரி தசாங்கம்,பன்னீர், நெய், நல்லெண்ணை, தேன்,டைமன் கல்கண்டு,பேரீச்சம் பழம்,ஜவ்வாது,வெட்டிவேர்,விளாமிச்சைவேர்,பச்சை கற்பூரம்,ஏலாதி லவங்கம்,பஞ்சுதிரி,சிறிய கணபதி ஹோம திரவியம், நவதானியம், நவக்கிரஹ சமித்து, நீர் இல்லத தேங்காய்,வெற்றிலை,பாக்கு,அவல்,பொரி,கடலை, நெல்,பச்சரிசி,உமி,தெர்ப்பை முஸ்டி,சிசன் துண்டு,பூர்னாதி பட்டு 2 முழம் ( சிகப்பு, பச்சை ) ஒவ்வொன்றும், வெள்ளை பரிவட்டம்,கோஜலம் ( சாணம் ),கோமியம்,மணல்,செங்கல் 31 எண்ணம்,குத்து விளக்கு, நிறை நாழி,கிண்ணம் பெரியது,டம்ளர்,தாம்பாளம் 5 எண்,அரிவாள், ஆசனப்பலகை, சிறிய குத்து விளக்கு 2 எண்,பால்,தயிர்,வெண்ணெய்,தேங்காய் 7 எண்,வாழைப்பழம் 24எண்,வாழை இலை 15 எண்,எலுமிச்சை பழம் 5 எண்,ஆப்பிள் 3 எண்,ஆரஞ்சு 3 எண்,திராட்சை 1/4 கிலோ,சர்க்கரைப்பொங்கல் 1/4 படி,குடுமி தேங்காய் பெரியது 3 எண்,.
புஸ்பம் - விளக்கு ஆரம் 1 , சிறிய விளக்கு ஆரம் 2,கழுத்துக்கு மல்லி ஆரம் 2,கும்பத்திற்கு கட்டி ஆரம் 3, விடு ஆரம் 3,கதம்பச்சரம் 20 முழம்,அருகம்புல் மாலை 1, நிலை மாலை செட் , ஜான் துண்டு,மல்லி அல்லது பிச்சி பூ 1000 ,உதிரி பூ 2 கிலோ ( துளசி,கேந்தி பூ இல்லாமல் )

முதல் பிறந்த நாள்

குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரத்தில் விழாவக கொண்டடுவது உண்டு.பிறந்த நாள் அன்று வீட்டில் கணபதி ஹோமம், ஆயுசு ஹோமம் செய்வித்தல் நல்லது.
பிறந்த நாள் அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து நட்சததிரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்வித்து வழிபாடு நடத்தவும்.
பிறந்த நாள் விழாவின் மறுதினம், குழந்தையை தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு முடி இறக்கி காது குத்த வேண்டும்( தேவைப்படும் பொருட்கள் தாயின் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள்). இந்த சடங்கை ஏதாவது ஒரு கோவில் சன்னதியில் வைத்து செய்யவேண்டும்.ஏதாவது பிரார்த்தனை ( நேர்த்திக்கடன் ) செய்திருந்தால் அந்த ஆலயத்தில் வைத்து இந்த சடங்குகளை செய்திட வேண்டும்

Friday, March 18, 2011

பிறப்பு

குழந்தை பிறந்தஉடன் சரியான நேரத்தையும் ஆண்டு,மாதம்,தியதி, நட்சத்திரம், ஊர் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்,ஆங்கில தேதி இரண்டையும் குறித்துக்கொள்ளுங்கள்.குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் கணீக்க வேண்டும் .
குழந்தை பிறந்ததினத்திலிருந்து , வீடு கூடுவதற்கு 16ம் நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம்.அல்லது அடுத்து வரும் நல்ல சுபதின்த்தில் குருக்களைய்யாவை அழைத்து கிரகசுத்தி சடங்கை செய்யவும். அன்றைய தின்மே சுபவேளையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது நல்லது. அன்று முடியாவிட்டால் 3 மாதத்துக்குள் நடத்துவது நல்லது.
குழத்தைக்கு புது ஆடை அணிவித்து தாயாரின் மடியில் இருக்கும் குழந்தையை,
தாயும்,தந்தையும் 3 முறை மாற்றிக்கொண்டபின் தகப்பனார் மடியில் வைத்துக்கொண்டு,ஒரு தாம்பாளத்தில் புழுங்கலரிசியை நிரப்பி,அரிசியில் முனை பழுதுபடாத விரலி ம்ஞ்சள் கொண்டு, குழந்தைக்கு சூட்டப்பட உள்ள பெயரை தகப்பனார் 3 முறை எழுதவேண்டும். பின் குழந்தையின் வலது காதில் தகப்பனார் மெல்லிய குரலில் 3 முறை உச்சரிக்கவேண்டும். பின் சபை அறிய 3 முறை உரத்த குரலில் சொல்லவேண்டும். குழந்தையின் அத்தை ( குழந்தையின் தகப்பனாரின் சகோதரி ) குழந்தைக்கு (காப்பிடுவது ) வளையல் அணிவிப்பது, தண்டை அணிவிப்பதும்ரபு.குழந்தையின் தாயின் வ்ழியிலிருந்து அரைக்கு சலங்கையும், தந்தைவழியில் கழுத்துக்கு சங்கிலியும் அணிவிப்பதும்ரபு.அதன்பின் ம்ற்றோர் குழந்தையை ஆசீர்வதிப்பது வழக்கம். வந்திருப்பவர்களுக்கு பூந்தி,காப்பரிசி கொடுக்கவெண்டும்.
காப்பரிசி - களைந்து அரித்த பச்சரிசியுடன் வ்றுத்த சிறுபருப்பும், எள்ளும் சேர்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரைப்பாகில் கலந்து கொடுப்பது.
குழந்தை பிறந்த 6 வது மாதத்தில் ஒரு சுபதினத்தில் முதல்முறையாக சர்க்கரை பாயாசம் ஊட்ட வேண்டும்.குழந்தைக்கு திருவமுது ஊட்டும் இந்த சடங்கினை ஆலயங்களில் வைத்தும் செய்வதும் உண்டு. அதன்பிறகு குழந்தைக்கு எல்லவித உணவுகளும் கொடுக்கலாம். குழந்தைக்கு திருவமுது ஊட்டுவதற்குரிய பொருட்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டுவருவார்கள்